4 மாணவர்கள் உடல் நசுங்கி பலி.. மருத்துவமனையில் 20 பேர்.. மாவட்டத்தையே அலற வைத்த மரண ஓலம்

x

அடித்துப் பிடித்து பேருந்தைப் பிடித்து பள்ளி, கல்லூரிக்கு செல்ல காலையில் அரக்கப் பறக்க கிளம்பிய 4 மாணவர்களுக்கு அதே பேருந்து எமனாக மாறிய கொடூர காட்சி தான் இது...

விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தில் இருந்து காலை 8.40 மணி அளவில் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மினி பஸ் வழக்கம் போல் ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி புறப்பட்டது...

காலை நேரம் என்பதால் அந்த மினி பஸ்ஸில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட்டம் அலைமோதியது...

ஸ்ரீவில்லிபுத்தூர் - மம்சாபுரம் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வளைவில் திரும்பிய பேருந்து எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததோடு...

சாலையை விட்டு பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டது...

பொதுமக்களும், தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினரும் பேருந்து இடிபாடுகளில் சிக்கியிருந்தோரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்...

இந்தக் கொடூர விபத்தில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர் சதீஷ் குமார், பள்ளி மாணவர்கள் மாடசாமி, நிதிஷ்குமார், வாசு ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்...

மேலும் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

குறுகலான சாலையில் வேகமாக சென்றதால் விபத்து நடந்ததா?...

அல்லது மினி பேருந்தில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்றது தான் விபத்திற்குக் காரணமா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...

விபத்துக்குள்ளான மினி பேருந்து ஓட்டுநர் இந்திரா நகரைச் சேர்ந்த நிதிஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,

பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரியும்... சாலையை அகலப்படுத்தக் கோரியும்...

மம்சாபுரத்தில் அரசுப் பேருந்தை சிறைப் பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

படிக்கச் சென்ற பிள்ளைகள் பரிதாபமாய் உயிரைப் பறிகொடுத்த சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்