விநாயகர் சதுர்த்தி - தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை தயாரிப்பது மற்றும் கரைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, களிமண் மற்றும் வைக்கோலால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்படும் என்றும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிலைகள் அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைகளை தயாரிப்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறையாக, சிலைகளின் ஆபரணங்களுக்கு உலர்ந்த மலர்கள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்றும், சிலைகளை பளபளப்பாக்க மரங்களில் உள்ள பிசின்களை பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு பொருட்கள், மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகள் ஆகியவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என்றும், சிலைகளின் மீது எனாமலை பூசக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகம் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக இந்த விநாயகர் சதுர்த்தியை சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.