வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம் கெஞ்சி கதறி அழுத பெண்கள் - பரபரப்பு காட்சிகள்
வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம் கெஞ்சி கதறி அழுத பெண்கள் - பரபரப்பு காட்சிகள்
வேலூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிரடிப் படையினருடன் அதிகாரிகள் குவியவே... மக்கள் கதறியழுது தர்ணாவில் ஈடுபட்டதால் அதிகாரிகள் பாதியிலேயே திரும்பிச் சென்றனர்...வேலூர் கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெருவில் அரசு இடத்தில் 45 குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 10ஆம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் நோட்டீஸ் வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது... அப்போது நோட்டீஸ் ஒட்ட வந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு அப்பகுதி குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்கள் திரும்பிச் சென்றனர். இதனையடுத்து மாநகராட்சி, வருவாய் துறை அதிகாரிகள், அதிரடி படையினருடன் குவிந்து ஜேசிபி இயந்திரம் மூலம் இன்று 45 வீடுகளையும் இடிக்க முயன்றனர். அவர்களை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள் 1 மணி நேரத்திற்கு மேலாக ஜேசிபி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்று இடம் வழங்க கோரியும், அதுவரை வீடுகளை இடிக்க விடமாட்டோம் எனவும் கதறிய மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்து போராடினர். ஒரு மூதாட்டி காவல்துறை அதிகாரியிடம் கெஞ்சியது பரிதாபத்தை ஏற்படுத்தியது... அவற்றையும் மீறி அதிகாரிகள் தனியாருக்கு சொந்தமான கட்டடத்தை இடித்து விட்டு, வீடுகளை இடிக்க வந்த போது ஜேசிபி முன் நின்று போராட்டம் செய்ததால் இடிக்கும் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது... அதிகாரிகளின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.