நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிக்கப்பட்ட விநாயகர் கோயில்
குண்டூர் ஊராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் 32 ஆண்டுகளுக்கு முன் விநாயகர் கோயிலை கட்டி அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில், நவல்பட்டு அண்ணாநகரைச் சேர்ந்த சாந்தி என்பவர், பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட கோயிலை அகற்ற உத்தரவிடக்கோரி, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், செப்டம்பர் 7-ம் தேதிக்குள் கோயிலை இடித்து அகற்ற உத்தரவிட்டது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், சாந்தி மீண்டும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வை நாடினார். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக தெரிவித்தார். இதையடுத்து, கோயிலை இடித்துவிட்டு, வரும் 21ம் தேதி, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன், விநாயகர் கோயில் இடித்து, அகற்றப்பட்டது.