திருச்சியை அலறவிடும் `ஆப்ரேஷன் அகழி’ ... வருண் IPS மேஜைக்கு வந்த ரிப்போர்ட் - அதிரடி ரெய்டு

x

திருச்சியை அலறவிடும் `ஆப்ரேஷன் அகழி’ ... வருண் IPS மேஜைக்கு வந்த ரிப்போர்ட் - பிரமாண்ட லாக்கர்...கிரேன் வைத்து தூக்கிய போலீஸ்

நில மோசடி தொடர்பாக, திருச்சி அரியமங்கலத்தில் மோகன் பட்டேல் என்பவரது வீட்டில் ஏழு மணி நேர சோதனைக்கு பிறகு, ஆவணங்கள், 2 டன் எடையுள்ள லாக்கரை போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர். என்ன நடந்தது என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

போலி ஆவணம் தயாரித்து நிலங்கள் அபகரித்துள்ளதாக திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு வந்த புகாரை தொடர்ந்து, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆப்ரேஷன் அகழி என்ற பெயரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நிலமோசடி தொடர்பாக, திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த மோகன் பட்டேல் என்பவரது வீட்டில் கடந்த ஞாயிற்று கிழமை போலீசார் சோதனை மேற்கொள்ள சென்றனர். ஆனால், உறவினர்கள் அனுமதிக்காததால் சோதனையை நடத்தாமல் போலீசார் புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில், நீதிமன்ற ஆணை பெற்ற மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், மோகன் பட்டேல் வீட்டில் சோதனை நடத்த மீண்டும் சென்றனர். அப்போது வீட்டின் வெளி கேட் பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்தவர்கள் கதவை திறக்காததால், கிராம நிர்வாக அலுவலர் பாலாம்பிகா முன்னிலையில் பூட்டை உடைத்து போலீசார் உள்ளே நுழைந்தனர்.

மதியம் இரண்டரை மணிக்கு தொடங்கிய சோதனை, 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. வீட்டில் உள்ள அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கணக்கெடுத்து பதிவு செய்து, மோகன் படேலின் மகள் பூர்ணிமா பட்டேலிடம் கையெழுத்திடுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

இதைத் தொடர்ந்து, மோகன் படேலின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை, பலத்த பாதுகாப்புடன் போலீசார் எடுத்துச் சென்றனர்.

சட்டவிரோதமாக ஆவணங்கள் எடுத்துச் சென்றதாக குற்றச்சாட்டு

அதே நேரத்தில், மிரட்டி ஆவணங்களை கைப்பற்றியதாகவும், நீதிமன்ற ஆணைப்படி உள்ள ஆவணங்களை மட்டுமல்லாது, மற்ற ஆவணங்களையும் சட்டவிரோதமாக எடுத்துச் சென்றதாகவும் மோகன் படேலின் மகள் பூர்ணிமா படேல் குற்றம் சாட்டினார்.

வேண்டுமென்றே மோகன் படேலை கார்னர் செய்வதற்காக அவசர அவசரமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞரும் குற்றம் சாட்டினார்.

இதைத் தொடர்ந்து நள்ளிரவில், மோகன் படேலின் வீட்டில் இருந்த இரண்டு டன் எடையுள்ள லாக்கரை வெளியே எடுத்த போலீசார், கிரேன் உதவியுடன் லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கை குறித்து சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளதாக மோகன் படேலின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மோகன் படேலின் குடும்பத்தினரின் கடும் எதிர்ப்புக்கு இடையே, ஆவணங்கள் மற்றும் லாக்கரை போலீசார் எடுத்துச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்