`அறிவிக்கப்பட்ட அவசரநிலை'... உச்சிக்கு சென்ற நாட்டின் BP...பயணிகளுக்கு தெரியாமல் நடந்த மிராக்கிள்..?
திருச்சியிலிருந்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானிலேயே வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு
அந்தி சாயும் வேளையில் திருச்சி... புதுக்கோட்டை வான்பகுதியில் விமானம் ஒன்று தொடர்ந்து வட்டமிட்ட காட்சிகள் வலைதளங்களில் சுற்ற தொடங்கியது.
அதேவேளையில் திருச்சி விமான நிலையம் பகுதியில் தீயணைப்பு வாகனங்கள்... ஆம்புலன்ஸ்கள் அணி வகுத்தன.. பதற்றம் தொற்றிக் கொள்ள வானில் வட்டமிடும் விமானத்தை தரையிறக்க அத்தனை நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜாவுக்கு மாலை 5:40 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்தான் அது.
141 பயணிகளோடு பறக்க தொடங்கிய AXB 613 விமானத்தில், சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை.. Hydraulic Failure என தகவல்கள் வெளியாகின... அப்படியே விமானத்தை இயக்குவது ஆபத்து என்றதும் விமானத்தை திருச்சியிலே தரையிறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
6:05 மணிக்கு விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
முதலில் விமானத்தில் எரிபொருளை குறைக்கும் வகையில் விமானம் திருச்சியிலேயே வானில் வட்டமடித்தது. பிறகு அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, அன்னவாசல், விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் விமானம் சுற்றியது...
திருச்சி விமான நிலையத்தில் தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார் நிலையில் வைக்கப்பட்டது.
2 மணி நேரத்துக்கு மேலாக 4 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் வானில் சுற்ற எரிபொருளும் குறைந்தது. 7:40 மணி அளவில் விமானத்தை தரையிறக்க ஆயத்த பணிகள் தொடங்கி, விமானம் பறக்கும் உயரம் குறைக்கப்பட்டது.
விமானி நேர்த்தியாக விமானத்தை கீழ்நோக்கி இயக்க, 8:14 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
விரைந்து விமானத்திலிருந்து பயணிகள் இறக்கப்பட்டார்கள்... அவர்கள் பத்திரமாக உள்ளனர் என்ற அறிவிப்பு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது...
பெரும் பதற்றத்திற்கு மத்தியில் Miraculous Landing ஆக விமானம் தரையிறக்கப்பட்டது. பயணிகள் சார்ஜா செல்ல விமானம் ஏற்பாடு செய்யப்படும் என ஏர் இந்தியா தெரிவித்தது. தொழில்நுட்ப கோளாறு குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.