சென்னையை நிலைகுலைய வைத்த `பாக்மதி' - எமனிடம் போய்வந்த உயிர்கள் - `கவாச்' காலத்தின் கட்டாயம்...

x

திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை அருகே, நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மைசூரில் இருந்து புறப்பட்ட பாக்மதி விரைவு ரயில், பெரம்பூர் வழியாக பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. 22 பெட்டிகளைக் கொண்ட அந்த ரயிலில் சுமார் 1,300 பேர் பயணம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள கவரைப்பேட்டை ரயில் நிலையம் செல்லும் வரை, அந்தப் பயணத்தில் எந்த தடங்கலும் இல்லை.

இரவு 8.30 மணி அளவில், கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் மெயின் வழித்தடத்தில் செல்ல கிரீன் சிக்னல் கிடைத்த போதிலும், பாக்மதி விரைவு ரயில் அருகில் உள்ள லூப்-லைனில் 75 கிலோ மீட்டர் வேகமாக சென்றது. அந்த தடத்தில் 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது, விரைவு ரயில் பயங்கர சத்தத்துடன் வேகமாக மோதியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூக்குரல் எழுப்பினர்.

இந்த விபத்தில் சரக்கு ரயிலின் 4 பெட்டிகள் சேதமடைந்ததுடன், தீப்பிடித்து எரியத் தொடங்கின. விரைவு ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன. பார்சல் பெட்டியும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. சத்தம் கேட்டு வந்த ஓடி வந்த உள்ளூர் மக்கள், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், ரயில்வே போலீசார், இருப்பு பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மீட்புப் பணியில் இறங்கினர். லேசான காயமடைந்தவர்கள், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கும், பலத்த காயமடைந்தவர்கள், சென்னை ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், அமைச்சர் சா.மு.நாசர், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

காயமடைந்து சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கும் பயணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதுபோன்று ரயில் விபத்துகள் தொடர்கதையாவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்