``மக்களே..! ஆர்டர் பண்ணிட்டீங்களா..?'' - வாவ் வரவேற்பு... தமிழக அரசின் அசத்தல் திட்டம்...
தமிழகத்தில் முதல் முறையாக... மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்து கொடுக்கும் இனிப்பு, காரங்களை பெற்று பரிசு பெட்டகமாக தமிழக அரசே விற்பனை செய்கிறது.... தீபாவளியை முன்னிட்டு முன்னெடுக்கப் பட்டிருக்கும் இந்த சிறப்பு ஏற்பாடு குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
நிதி ஆதாரங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் பங்கு கொடுக்கும் விதமாக... தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு ஏற்பாடுதான் இது...
கம்பு, சோளம், கருப்பு கவுனி என நவதானியங்களால் ஆன லட்டுகளுடன்.... கை முறுக்கு, சாமை முறுக்கு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், அலங்காரப் பரிசு பொருள்கள் என நிரப்பி வைக்கப்பட்டிருக்கும் இவையனைத்தும் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருக்கும் பெண்களின் கை வண்ணங்களால் உருவானவை...
மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்கள் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த பொருள்களையும், பண்டங்களையும் சேகரித்து "மதி தீபாவளி பரிசு பெட்டகம்" என அரசே விற்பனை செய்கிறது...