`24 மணி நேரம்'; கலெக்டர் முதல் SP வரை... ஆர்டர் போட்ட CM; கிராமங்களுக்கு ஓடோடி வரும் அரசு எந்திரம்

x

மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்துக்கே வரும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், மாதத்தில் ஒரு நாள் குறிப்பிட்ட வட்டத்தில் தங்கி, அங்கு கள ஆய்வில் ஈடுபட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் படி, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்வதுடன், பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும் தங்கு தடையின்றி மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய இத்திட்டம் வழிவகுக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம், ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை அமைக்கப்படும் என்றும், முகாம் நடைபெறுவது குறித்து குறிப்பிட்ட வட்டத்தில் உள்ள மக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், முகாம் நடைபெறும் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர அதிகாரிகள் என அனைவரும் 24 மணி நேரம் தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் தொடங்கி காவல் கண்காணிப்பாளர், சுகாதார சேவை துறையினர், மகளிர் திட்ட அதிகாரி, உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் முகாமில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள், குடியிருப்பு பகுதிகள் உட்பட வட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அடிப்படை தேவைகள் முறையாக மக்களுக்கு கிடைக்க பெறுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.

மேலும் திட்டத்தில் கண்டறிந்த அம்சங்களை ஆவணமாகத் தயாரித்து, வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கோரிக்கைகளை கனிவோடு பரிசீலித்து, எவ்வித தாமதமும் இன்றி அவற்றை நிறைவேற்றிட வேண்டுமென்பதே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்