``அழகானது, இனிமையானது; ஆனால் தமிழ் பேசுவதுதான் சிரமமாக உள்ளது...''
தமிழ் இனிமையான மொழி, அதனை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில், அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, தமிழ் மக்களைப் போன்று பேச வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், ஒருநாள் தமிழ் மக்களைப் போன்று பேசுவேன் என்றும் கூறினார்.
தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்றும், கவுஹாத்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பை தொடங்க பரிந்துரை செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழை கற்றுக்கொண்டு வருவதாகவும், தமிழ் செய்தித்தாள்களை தாம் படிப்பதாகவும் கூறினார்.
தமிழில் பேசினால் தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும், ஆனால், பேசுவதுதான் சிரமமாக உள்ளது உள்ளது என்றும் அவர் கூறினார்.
பலர் மொழிகளாலும் மதங்களாலும் பிரிவினை உண்டாக்குவார்கள் என்றும், அந்த எதிர்மறை எண்ணங்களுக்கு எதிராக நாம் போராட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உலகின் மிக முக்கியமான முடிவுகளில் இந்தியாவின் பங்கு முக்கியமாக உள்ளது என்றும், உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.