இருப்பதற்கு வீடு இல்லாமல் தவிக்கும் சிறுமி.. மண்ணெண்ணெய் விளக்கு ஒளியில் படிக்கும் அவலம்.. "படிக்க ரொம்ப ஆசைப்படுறேன்.. ஆனால்.." தமிழ்நாடு அரசுக்கு வைத்த கோரிக்கை
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியாரியபட்டியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி, வசிக்க வீடில்லாமல், உரிய மின்சார வசதியில்லாமல் படிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
கண்டியன் கோவில் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் வைஷ்ணவி, தனது பாட்டியுடன் வசித்து வரும் நிலையில், அவரது தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் உள்ளார். இவரது தாயார் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில், இக்குடும்பம் வசிக்க ஏதுவாக வீடில்லாமல் தவித்து வருகின்றனர். தற்போதைக்கு வீட்டின் சுவரை செம்மண்ணால் கட்டி தகர ஓலைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க மின்வாரியம் மறுத்து விட்டதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பள்ளி முடிந்து மாலை நேரங்களில் மின்சார வசதியில்லாமல் படிக்க முடியாததால், மண்ணெண்ணெய் விளக்கு ஒளியில் படித்து வருகிறார் மாணவி வைஷ்ணவி. இதனால் தங்களுக்கு குடியிருக்க வீடும், உரிய மின்சார வசதியும் செய்து கொடுக்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கிறார் மாணவி வைஷ்ணவி.