நம்பி வந்த வடமாநில இளைஞர்..திடீரென கேட்ட அலறல் சத்தம் - விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில், வடமாநில இளைஞர்களைக் கடத்திச் சென்று, 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாசிம் அக்ரம் என்பவர், ரயிலில் அறிமுகமான தீபக் என்பவரின் பேச்சை நம்பி, 3 பேரை அழைத்துக் கொண்டு வேலைக்காக ஜோலார்பேட்டைக்கு வந்துள்ளார். அவர் கூறிய இடத்துக்குச் சென்ற வாசிம் அக்ரம் குழுவினரை அந்த கும்பல் காரில் கடத்திச் சென்று தாக்கி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன 4 பேரும், ஜிபே மூலம் ஒரு லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளனர். மேலும் அந்த கும்பல் ஏடிஎம் கார்டுகளை பறித்து, அதன் மூலமாகவும் பணம் எடுத்ததாக கூறப்படுகிறது.
இதேபோல், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 7 பேரை அந்த கும்பல் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டித் தாக்கி ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றது. அப்போது அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள், அரவிந்தன் என்பவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த தனிப்படை போலீசார், மொத்தம் 6 பேரை கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.