"திருப்பதியில் திடீர் மாற்றம்...தொற்றிய பதற்றம்" - ஜெகன்மோகன் ஆவேசம்
ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி வருகையையொட்டி, சித்தூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி வருவதற்கு அனுமதியில்லை, அவரது நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரசாருக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது. திருப்பதியில் பாதுகாப்பு, பதற்றம் ஏற்பட திருப்பதி பயணத்தை ரத்து செய்வதாக ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். திருமலையில் பெருமாளை கும்பிட வந்தால் கைது செய்வீர்களா? அது சட்டத்திற்கு புறமான செயல் என்று வர்ணிப்பீர்களா என கேள்வியை எழுப்பினார். விஜயவாடாவில் லட்டு விவகாரம் தொடர்பாக விளக்கம் கொடுத்தவர், தான் திருப்பதி செல்வதாக சொன்னதும் போராட்டம் நடத்த அண்டைய மாநிலங்களில் இருந்து பாஜக தொண்டர்களை அழைத்துவர ஏற்பாடு செய்தது என குற்றம் சாட்டினார். எங்கள் கட்சியினரை தடுத்துவிட்டு, திருப்பதியில் பாஜகவினர் பெருமளவு கூடுகிறீர்கள்? இதில் உங்கள் உள்நோக்கம் என்ன? என்று சந்திரபாபு நாயுடு அரசுக்கு கேள்வியை எழுப்பினார். ஆந்திரா முதல்வராகும் முன்பாக திருப்பதி பெருமாளை தரிசித்துவிட்டே நடைபயணம் செய்ததாக சொன்ன ஜெகன்மோகன் ரெட்டி, என்னுடைய மதம் என்ன? என்று கேட்கிறார்கள், என்னுடைய மதம் மனிதாபிமானம் என்று எழுதிக் கொள்ளுங்கள் என ஆவேசமாக குறிப்பிட்டார்.