கொள்ளையர்கள் தள்ளிவிட்டதாக தமிழகத்தை அதிர வைத்த ரயில்வே போலீஸ் - திடீர் டுவிஸ்ட்..
மதுபோதையில் ரயிலில் இருந்து கீழே விழுந்து விட்டு, ரயில் கொள்ளையர்கள் தள்ளிவிட்டதாக கூறி நாடகமாடிய ஆயுதப்படை தலைமை காவலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் குலசேகரன் கோட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார். மயிலாடுதுறையில் ஆயுதப்படை தலைமை காவலராக பணியாற்றி வரும் இவர், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு முன்பதிவில்லா பெட்டியில் பயணம் செய்திருக்கிறார். பயணத்தின் போது, ஜெயக்குமார் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், ரயில் படிக்கட்டில் அமர்ந்துபடி சென்ற அவர், விருதுநகர் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்திருக்கிறார். உடனே, ஜெயக்குமாரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் அனுமதித்திருக்கின்றனர். விசாரணையில்,
ரயிலில் இருந்த கொள்ளையர்கள் தன்னுடைய செல்போன் மற்றும் மணிபர்ஸை திருடிவிட்டு ரயிலில் இருந்து தள்ளி விட்டதாக போலீசாரிடம் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். உடனே, திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவில்லாத பெட்டியில் சோதனை நடத்திய போலீசார், ரயிலில் இருந்து ஜெயக்குமாரின் செல்போனையும், மணிபர்ஸையும் மீட்டிருக்கின்றனர். முடிவில், மதுபோதையில் கீழே விழுந்துவிட்டு, ரயில் கொள்ளையர்கள் தள்ளிவிட்டதாக ஜெயக்குமார் நாடகமாடியது தெரியவர, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.