மதம் மாறினால் ரூ.10 கோடி பரிசு.. நம்பிய தூத்துக்குடி இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞருக்கு IMO என்ற செயலி மூலமாக சொக்க நாதன் என்ற IDல் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால், 10 கோடி ரூபாய் தருவதாக கூறி அதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்க, வருமானவரி செலுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் கேட்டுள்ளார். அதனை நம்பிய இளைஞர், 4 லட்சத்து 88 ஆயிரத்து 159 ரூபாய் பணத்தை ஜிபே மூலம் அனுப்பிய நிலையில், பிறகு தான் ஏமாந்தது தெரிந்து NCRPல் புகார் பதிவு செய்துள்ளார். இதனடிப்படையில், சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், மோசடி வேலையில் ஈடுபட்டது தஞ்சை ஆனந்தம் நகரைச் சேர்ந்த ராஜவேல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.