அறுவை சிகிச்சை கருவிகளை வெறும் கையால் கழுவிய சிறுவன்..!மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அறுவை சிகிச்சைக்கான கருவிகளை சிறுவன் கழுவும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி சோட்டையின் தோப்பு பகுதியை சேர்ந்த பவுல்ராஜ் என்பவருக்கு, சர்க்கரை நோய் காரணமாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் காலில் இருந்த ஒரு விரலை அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். இதனிடையே, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் பழைய கட்டை அவிழ்த்துவிட்டு, செவிலியர்கள் புதிதாக கட்டு கட்டியுள்ளனர். அப்போது, அறுவை சிகிச்சை கருவிகளை பவுல்ராஜின் படுக்கை அருகே வைத்துவிட்டு செவிலியர்கள் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த கருவிகளை, பவுல்ராஜ் தனது மகனை விட்டு சுத்தம் செய்ய அறிவுறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த சிறுவனும் கழிவறைக்கு சென்று சுத்தம் செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.