"நீ தானே பானிபூரி போட்ட.. கையில் கிளவுஸ் எங்க..?" - கேள்விகளால் வறுத்தெடுத்த அதிகாரி
தூத்துக்குடியில் ஹோட்டல் மற்றும் பானிபூரிக் கடைகளில் பழைய கெட்டுப்போன உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். வேலவன் ஹைப்பர் மார்க்கெட் வளாகத்தில் உள்ள கே.எஃப்.சி உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, அனுமதி இல்லாத மெக்னீசியம் சிலிக்கேட் என்ற சேர்மத்தின் மூலம் சமையல் எண்ணெய்யை சுத்திகரித்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் சேர்மம், 45 லிட்டர் பழைய சமையல் எண்ணெய், முன்னரே தயாரித்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த 56 கிலோ சிக்கனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், பழைய சமையல் எண்ணெய்யை பயன்படுத்திய கே.எஃப்.சி உணவகத்தின் உரிமத்தையும் இடைக்காலமாக ரத்து செய்தனர்.