தமிழகம் முழுவதும் களைகட்டிய திருவிழாக்கள்.. பூதங்களுக்கு திருமணம் நடத்தி வினோத தரிசனம்
தமிழகம் முழுவதும் களைகட்டிய திருவிழாக்கள்.. பூத உருவங்களுக்கு திருமணம் நடத்தி கொண்டாடிய பக்தர்கள்
தமிழ்நாட்டின் பல்வேறு கோவில்களில் வைகாசி மாதத்தை முன்னிட்டு திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கரூர் மாவட்டம் பேரூர் உடையாப்பட்டி மகா மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று கழுகுமரம் ஏறுதல், தரம் குத்துதல், படுகளம் விழுதல் மற்றும் பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள, ஸ்ரீபொம்மையசுவாமி, ஸ்ரீவீருமல்லம்மாள், ஸ்ரீஜக்கம்மாள் கோவில் திருவிழாவில் மாடு விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் தெருவில் 3 முறை மாடுகள் விரட்டப்பட்ட நிலையில், பூசாரிகள் மாடுகளுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பட்டியில் உள்ள, தானா முளைத்த மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூதங்களுக்கு திருமணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூங்கில் குச்சிகளால் கட்டப்பட்ட பிரம்மாண்ட ஆண், பெண் பூத உருவங்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில், மஞ்சள் விளையாட்டு விழா நடைபெற்றது. மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டர்களில் மஞ்சள் நீரை எடுத்துச் சென்று, மக்கள் மீது மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டது.