"எல்லோர் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்க சொன்னாங்க..." -திருவாரூரை அதிர வைத்த பெண்...
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து வேலை இழந்த பெண், ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் 21 ஆண்டுகாலமாக தற்காலிக கணினி ஆப்பரேட்டராக பணியாற்றி வந்த சாந்தி என்பவர், கணவரை பிரிந்து, தனது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். பேரூராட்சி துணைத்தலைவரின் கணவர் ராபர் பிரைசுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, நீடாமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ராபர்ட் பிரைஸ் சாந்தியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில், பேரூராட்சி தலைவர் ராமராஜ், கடந்த மார்ச் மாதம் சாந்தியை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். காவல்துறையிடம் சாந்தி புகார் அளித்ததற்கு பழிவாங்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 4 மாதகாலமாக வருமானம் இழந்து தவித்து வரும் சாந்தி, ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு நிலவியது.