"இதுக்கே இன்னும் வழியில்ல.. இந்த வேட்டி, சட்டை எதுக்கு" - வெள்ளம்.. நெல்லையில் ஓயாத குமுறல்
பெரு வெள்ளம் பாதித்து 20 நாட்களாகியும், நெல்லை, மேல நத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் முறையாக குடிநீர் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.கன மழையால் கடந்த மாதம் நெல்லையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சென்ற மின் கம்பங்கள் அடித்து செல்லப்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வெள்ளம் பாதித்து 20 நாட்களாகியும் ஆற்றின் கரையோரம் உள்ள மேல நத்தம், மேல பாட்டம் மற்றும் கீழ பாட்டம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு முறையான குடிநீர் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. லாரிகள் மூலம் மாநகராட்சி நிர்வாகம் அனுப்பும் தண்ணீரில் மருந்து கலக்கப்பட்டிருப்பதால், அதனை குடிக்கவோ, சமைக்கவோ முடியவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். தொடர்ந்து, ஆற்றில் இருந்துதான் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருவதாகவும், நீரேற்று நிலையத்தில் உள்ள மோட்டார்களை விரைந்து சீரமைத்து தரும்படியும் கோரிக்கை வைத்தனர்.