இளைஞரை கொன்று குவாரியில் புதைத்த நண்பர்கள்…

x

கோவை மாவட்டம் , பொள்ளாச்சி அருகே உள்ளது சந்திராபுரம் பகுதி… லாரிகள் நடமாட்டத்துடன் காணப்படும் கல்குவாரிக்குள் அன்று காவல்துறை நுழைந்தது…

மணல் பாதையில் அடுத்தடுத்து வாகனங்கள் ஊர்ந்து வர… குவாரிக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் காவல்துறையினர் தோண்ட ஆரமித்தனர்… அந்த காட்சி, அங்கிருந்த சிலரை கண்ணீரில் கதற வைத்தது.

ஆம், காவல்துறை தோண்டி எடுத்தது ஒரு ஆண் சடலம்…

யாரோ அவரை கொன்று இங்கு புதைத்திருக்கிறார்கள்.

கொல்லப்பட்டவர் யார்? கொலைக்கான காரணம் என்ன? குற்றவாளிகள் எங்கே? இப்படி புரியாத புதிராக இருக்கும் கேள்விகளுக்கு விடைகாண விசாரணையில் இறங்கினோம்…

கொல்லப்பட்ட இளைஞர் அருண் கார்த்திக்… 24 வயதாகிறது. ராஜாமில் ரோட்டை சேர்ந்தவர் .டிரைவராக வேலைப்பார்த்து வந்த அருண் கார்த்திக்கிற்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் திருமணமாகியுள்ளது. எப்போதும் வெளியில் சென்று நேரமாக வீட்டிற்கு வரும் அருண் கார்த்திக் சம்பவத்தன்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை…

அருண் கார்த்திக்கின் குடும்பத்தினரும் காணாமல் போனவரை பல இடங்களில் தேடிப்பார்த்திருக்கிறார்கள். கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. அதன் பிறகு தான் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசாரும் அருண் கார்த்திற்கு தெரிந்தவர்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் என அனைத்து இடங்களிலும் விசாரணை நடத்திருக்கிறார்கள். ஆனால், கார்த்திக் பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை.

உடனே கார்த்திக்கின் செல்போன் நண்பரை சைபர் கிரைமில் கொடுத்து டிராக் செய்திருக்கிறார்கள். அப்போதுதான் காணாமல் போன அருண் கார்த்திக் கடைசியாக சூரியபிரகாஷ் மற்றும் அரவிந்த் என்பவர்களுடன் பேசியது தெரியவந்துள்ளது. உடனே இரண்டு பேரை தூக்கி வந்து போலீசார் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் சொன்ன வாக்குமூலம் காவல்துறையை கதிகலங்க வைத்தது…

அருண் கார்த்திக் ஐபிஎல் போன்ற கிரிக்கெட் மேட்சில் நண்பர்களுடன் பெட்டுகட்டி லட்சங்களில் பணத்தை இழந்திருக்கிறார். அதில் மார்ச் மாதம் நடந்த மேட்சிற்கு உயிர் நண்பனான சூரியபிரகாஷிடம் கடன் வாங்கி சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் சூரியபிரகாஷ் கொடுத்த கடனை அருண் கார்த்திக்கிடம் திருப்பி கேட்டுள்ளார்… ஆனால், அருண் கார்த்திக் பணத்தை கொடுக்காமல் அலை கழித்து வந்திருக்கிறார். இதனால் சூரியபிரகாஷிற்கு அருண் கார்த்திக் மீது கொலைவெறி எழுந்திருகிறது.

சம்பவத்தன்று சூரியபிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளி அரவிந்த் ஆகிய இருவரும் அருண் கார்த்திக்கை மதுகுடிக்க அழைத்திருக்கிறார்கள். சந்திராபுரம் கல்குவாரி பகுதியில் மூவரும் ஒன்றாக மதுகுடிக்க போதையில் கொடுத்த பணத்தை சூரியபிரகாஷ் திருப்பி கேட்டுள்ளார். உடனே நண்பர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது. அதில் சூரியபிரகாஷ் மற்றும அரவிந்த் ஒன்றாக சேர்ந்து கார்த்திக்கை கல்லால் தாக்கி கொலைச் செய்திருக்கிறார்கள்.

பிறகு கொலையிலிருந்து தப்பிக்க அதே பகுதியில் குழி தோண்டி அருண் கார்த்திக்கை புதைத்திருக்கிறார்கள். ஆனால், விசாரணையில் புதைத்து வைக்கப்பட்ட உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகள் இருவரையும் கைதுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்