அப்பாவையே மகன் கட்டையால அடிச்சி கொடூரமா கொலை பண்ணியிருக்காரு. காரணம் என்ன?

x

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது சுண்ணாம்புகாளை பள்ளிப்பட்டு கிராமம்.

இயற்கை எழில் சூழ்ந்த இந்த அமைதியான கிராமத்தில், அன்று அந்த அமைதியை சீர்குலைக்கும் விதமாக ஒரு கொலை விழுந்திருக்கிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கந்திலி போலீசார், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.

கொல்லப்பட்டவர் ஜெயபால். 42 வயதான இவர் சுண்ணாம்புகாளை பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி சிவகாமி என்ற மனைவியும், உமேஷ், சுகன்யா என்ற மகனும் மகளும் உள்ளனர்.

கொத்தனாராக வேலைப்பார்த்து வந்த ஜெயபால், கர்நாடகா, கேரளா என மாநிலம் விட்டு மாநிலம் சென்று, அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்திருக்கிறார்.

மாதத்தில் 2 முறை மட்டுமே வீட்டுக்கு வரும் ஜெயபால், இயற்கையோடு ஒன்றிய இந்த வீட்டில், மனைவி பிள்ளைகளோடு ஓய்வெடுப்பது வழக்கம்.

இந்த நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று இதே வீட்டில் ஜெயபால் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.

ஜெயபாலுக்கு சொல்லி கொள்ளும் அளவு எதிரிகள் என்று ஊரில் யாரும் இல்லை. வெளியே இருந்து வந்து யாரும் கொலை செய்திருக்கவும் வாய்பில்லை. என்ன நடந்தது என்று போலீசார் ஜெயபாலின் குடும்பத்தாரிடம் விசாரித்த போது தான், தாயும் மகனும் சேர்ந்து ஜெயபாலை அடித்து கொன்ற பயங்கரம் தெரிய வந்திருக்கிறது. நடந்த கொலைக்கு காரணமாக சொல்லப்பட்டது ஒரு கள்ளக்காதல்.

கடந்த சில நாட்களாக பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வந்த ஜெயபால், சம்பவ நாளன்று இரவு தான் பெங்களூரில் இருந்து வீடு திரும்பி இருக்கிறார்.

தலைக்கேறிய போதையில் வீடு வந்து சேர்ந்தவர், மனைவி கையால் பரிமாற சொல்லி சாப்பிட்டுவிட்டு, மனைவியை ஒன்றாக இருக்க அழைத்திருக்கிறார்.

ஆனால் அதற்கு சிவகாமி மறுப்பு தெரிவித்ததோடு வீட்டு வாசலிலேயே படுத்திருக்கிறார்.

சிவகாமிக்கு வேறு ஒருவரோடு தொடர்பிருப்பதாக அரசல்புரசலாக ஜெயபாலுக்கு ஒரு தகவல் வந்திருக்கிறது. அந்த தகவல் சந்தேகமாக அவரது மனதில் குடி கொண்டு நீண்ட நாட்களாகவே அவரை ஆட்டி படைத்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் தான் தாம்பத்திய உறவுக்கு சிவகாமி மறுப்பு தெரிவிக்கவே, அந்த கள்ளக்காதல் சந்தேகத்தை ஜெயபால் உறுதியாக நம்பியிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயபால், போதையில் மனைவியோடு தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அது அடிதடியில் முடிந்திருக்கிறது.

அப்பா அம்மாவை அடிப்பதை பார்த்ததும் உமேஷூக்கு கோவம் தலைக்கேறியிருக்கிறது.

தந்தை என்றும் பாராமல், விறகு கட்டையால் ஜெயபாலின் பின்னந்தலையில் ஓங்கி அடித்திருக்கிறார் உமேஷ்.

இதனால் நிலை குலைந்து விழுந்த ஜெயபால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போயிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ஜெயபாலின் மனைவியையும் மகனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்