ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு - காலை இழந்த அப்பாவி பயணி..சென்னை ரயில் நிலையத்தில் பரபரப்பு
ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு - காலை இழந்த அப்பாவி பயணி..அடுத்த சில நொடிகளில் அதிரடி காட்டிய போலீஸ் - சென்னை ரயில்
நிலையத்தில் பரபரப்பு
சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஷாலிமார் விரைவு ரயிலில், வடமாநிலத்தை சேர்ந்த கிரண்குமார் என்னும் இளைஞர் பயணித்துக் கொண்டிருந்தார். கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் மேம்பாலத்தில் ரயில் வந்து கொண்டிருந்த போது, கிரண்குமார் ரயில் படியின் அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த 3 இளைஞர்கள் கிரண்குமாரின் செல்போனை பறிக்க முயற்சித்தனர். இதில் கிரண்குமார் ரயிலில் இருந்து கீழே விழுந்த நிலையில், வலது கால் துண்டாகி, இடது கால் பாதம் வெட்டுப்பட்டது. சம்பவத்தை அறிந்த ரயில்வே போலீசார் கிரண்குமாரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த செல்போன் ஒன்றை கைப்பற்றிய ரயில்வே போலீசார், அதைக் கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்போன் சுந்தரேசன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. பின்னர் யுவராஜ் மற்றும் ஹரி பாபு ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது கஞ்சா போதையில் செல்போன் பறிக்க முயன்றதை ஒப்புக் கொண்டனர். மற்றொரு குற்றவாளியான சுந்தரேசன் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.