"ஜூன் மாதத்திற்குள் பணி நியமனம்" - வெளியான அதிமுக்கிய அறிவிப்பு
பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர்
பணிகளில், 3 ஆயிரத்து 192 காலிப்பணியிடங்களை
நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் சென்னையில் இன்று தொடங்கியது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பிற துறை
பள்ளிகளில், காலியாக 3 ஆயிரத்து 192 பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு, கடந்த
பிப்ரவரியில் நடந்தது. தேர்வு முடிவுகள் வெளியான பின்,
சென்னையில் இன்று முதல் 2ஆம் தேதி வரை சான்றிதழ்
சரிபார்ப்பு நடைபெறுகிறது. கணக்கு மற்றும் புவியியல்
பாடங்களுக்கு சேத்துபட்டு கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியிலும், தாவரவியல் பாடத்திற்கு விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், விலங்கியல் பாடத்திற்கு அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், இன்று காலை
முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு இறுதி கட்ட தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, ஜூன் மாதத்திற்குள் புதிய ஆசிரியர்கள் அனைவரும் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.