கோடிக்கணக்கில் பேரம்... வளைத்து பிடித்த வனத்துறை
கோடிக்கணக்கில் பேரம்... வளைத்து பிடித்த வனத்துறை கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வன பாதுகாப்புப் பிரிவினர், அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 5 அடி நீளம் கொண்ட யானை தந்தம் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த வனத்துறையினர், வாகனத்தில் வந்த கீழானவயல் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சந்திரசேகர், பட்டிவீரன் பட்டியைச் சேர்ந்த முருகேசன், பொன்வண்ணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில், சந்திரசேகர் ஓராண்டாக இந்த யானை தந்தத்தை வைத்திருந்ததும், அதனை விற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. மேலும், கேரளாவைச் சேர்ந்த சிலரிடம், கோடி கணக்கான ரூபாய்க்கு பேரம் பேசி, இந்த யானை தந்தத்தை விற்க முயன்றதும், அதற்காக பட்டி வீரன் பட்டிக்கு எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து தெரிவித்த வனத்துறையினர், யானை தந்தத்திற்கு மதிப்பு எதுவும் இல்லை என்றும், இதுபோன்று பேரம் பேசுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவித்தனர்.