அடிக்கடி அம்மா வீடு சென்ற மனைவி - திடீர் மாயம் - பைனான்சியர் கணவன் தலையில் இறங்கிய இடி
கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள செஞ்சேரிமலையை சேர்ந்தவர் கிருத்திகா. 25 வயது இளம் பெண்ணான இவர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பைனான்சியர் ஒருவரை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கிறார். இதனிடையே, பெற்றோரை பார்க்க செல்வதாக கூறி கிருத்திகா அடிக்கடி சொந்த ஊர் சென்றதால், இது குறித்து கணவர் கேள்வி எழுப்பியதில் இருவருக்கிமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில், வீட்டிலிருந்த நகைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு மாயமான கிருத்திகா, கணவருடன் சேர்ந்து வாழ மறுத்து தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, எடுத்துச் சென்ற நகைகளை திருப்பி கொடுக்குமாறு கேட்ட கணவர் மீது, தன்னை துன்புறுத்தியதாக போலீசில் புகாரளிப்பேன் என கிருத்திகா மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. விசாரணையில், கிருத்திகாவிற்கு ஏற்கனவே திருமணமானதும், கணவரை பிரிந்த அவர் முறைப்படி விவாகரத்து பெறாமலும், இதனை மறைத்து பைனான்சியரை திருமணம் செய்து மோசடி செய்ததும் தெரியவந்தது. இந்நிலையில், அறவக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இது குறித்து பைனான்சியர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். வழக்கு விசாரணையில், மோசடி அம்பலமான நிலையில், கிருத்திகா மற்றும் அவரின் தாய் பலாமணியை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.