அதிகாலையில் திருட வந்த திருடர்கள்.. தடுத்த வட மாநில தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி
கடலூர் உடலப்பட்டு பகுதியில், நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், அங்கிருந்த இரும்பு பைப்புகளை திருட முயன்றுள்ளனர். அதனை தட்டிக்கேட்ட வடமாநில தொழிலாளர்களை இளைஞர்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த அஜீஷ் சுக்கிலா மற்றும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த பிஷ்ணோசிங் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் பலத்த காயமடைந்த நிலையில், இருவரும் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வட மாநில தொழிலாளர்கள் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஆளாவதாக சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், வட இந்திய தொழிலாளர்கள் பணி செய்ய அச்சப்படுவதாகவும், இதன் காரணமாக பணியில் தோய்வு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.