மின்சாரம் தாக்கி உயிரிழந்த காவலாளி - முதல்வருக்கு MLA அவசர கடிதம்
பெரும்பத்தை பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம் தனியார் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல பணிக்கு சைக்கிளில் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, திடீரென அடித்த காற்றில், 3 மின் கம்பங்களும் ஒரு மரமும் முறிந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் மின் கம்பிகள் சங்கரலிங்கம் மீது விழுந்ததால், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு நிவாரணமும், மகளுக்கு அரசு வேலையும் வழங்கக்கோரி, உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து 3 வது நாளாக சங்கரலிங்கம் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துள்ளனர். இதனிடையே, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், மின்சாரத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், காவலாளி உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.