வயநாடு காயம் ஆறுவதற்குள் அடுத்த பேரிடி...தமிழகத்தை சுற்றி காவு வாங்கும் இயற்கை... நடுங்கும் மக்கள்
வயநாடு காயம் ஆறுவதற்குள் அடுத்த பேரிடி
தமிழகத்தை சுற்றி காவு வாங்கும் இயற்கை
பேரழிவை கண்முன் பார்த்து நடுங்கும் மக்கள்
ஆந்திரா, தெலங்கானாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இயற்கையின் கோரத் தாண்டவத்தை விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு...
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இரு மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
தெலங்கானா மாநிலம் கம்மம், சூர்யா பேட்டை மாவட்டங்களில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல ஆந்திர மாநிலம் கிருஷ்ணா, குண்டூர் ஆகிய பகுதிகளில், கனமழையால் வீடுகள் இடிந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி ஒன்று, கனமழையால் முழுவதுமாக நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. அந்த வழியாக 45 பயணிகளுடன் சென்ற அரசுப்பேருந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள், தங்களை காப்பாற்றுமாறு அதிகாரிகளுக்கும், உறவினர்களுக்கும் செல்போன் மூலம் வீடியோக்களை பதிவுசெய்து அனுப்பினர். உடனடியாக விரைந்த அதிகாரிகள் பேருந்தில் சிக்கி தவித்த 45 பயணிகளையும், பத்திரமாக மீட்டனர்.
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள வெங்கடய்யாபாலம் என்ற கிராமத்தில், கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடியது. ஆற்றின் குறுக்கே போடப்பட்டுள்ள தரைப்பாலம் வழியாக, கயிற்றை கட்டி மக்களை மீட்கும் பணி நடைபெற்றது. அப்போது அலட்சியமாக ஒற்றைக் கையால் கயிற்றை பிடித்து கடக்க முயன்ற நபரை, வெள்ளம் இழுத்துச் சென்ற நிலையில், அவரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.
இதேபோல் கிருஷ்ணா மாவட்டத்தில், இருசக்கர வாகனத்தில் ஆற்றை கடக்க முயன்ற இளைஞர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் கனமழையால் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாநில அரசு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது.
இதனிடையே, மீட்புப் பணியில் உதவுவதற்காக, தேசிய பேரிடர் மீட்புப் படையின் 30 பேர் கொண்ட 2 குழுக்கள், அரக்கோணத்தில் இருந்து விஜயவாடா விரைந்துள்ளன.