டாஸ்மாக் பார் வழக்கு.. ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு அதிரடி தீர்ப்பு
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை மூட நடவடிக்கை எடுக்கும்படி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ரத்து செய்துள்ளது.
2021 ஆம் ஆண்டு மற்றும் 22 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட டாஸ்மாக் பார் டெண்டர் அறிவிப்பினை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்தநிலையில், 2021ம் ஆண்டு டெண்டர் அறிவிப்பை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், தமிழகத்திலுள்ள டாஸ்மாக் பார்களை 6 மாதங்களில் மூட ஆணையிட்டது. அதேபோல், 2022ம் ஆண்டு டெண்டரை எதிர்த்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், டெண்டரை ரத்து செய்தது. இந்த உத்தரவுகளை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. இந்தநிலையில் தலைமை நீதிபதி அமர்வு, 2021 ஆம் ஆண்டு டெண்டரை எதிர்த்த வழக்குகளை, தள்ளுபடி செய்த உத்தரவை உறுதி செய்துள்ளது. 6 மாதங்களில் டாஸ்மாக் பார்களை மூடுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவையும், ரத்து செய்த தலைமை நீதிபதி அமர்வு, புதிய டெண்டர் கோர டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது.