பாய்ண்டை பிடித்த தமிழ்நாடு.. என்ன செய்ய போகிறது கர்நாடகா?

x

தமிழகத்திற்கு ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிடுமாறு காவிரி ஒழுங்காற்றுக் குழுவை தமிழக அரசு வலியுறுத்தியது.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 97வது கூட்டம், அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேட்டூர் அணையில் தற்போது 14.08 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதாகவும், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக ஆயிரத்து 800 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதாக தமிழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த ஆண்டு மே 30ஆம் தேதியிலிருந்து தென்மேற்கு பருவமழை இயல்பாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே, தமிழகத்திற்கு ஜூன் மாதம் தர வேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

எனினும், நீண்ட விவாதத்திற்கு பிறகு ஜூன் கடைசி வாரத்தில் நடைபெற இருக்கும் மற்றுமொரு கூட்டத்தில் நிலைமையை ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என குழுவின் தலைவர் வினித் குப்தா தெரிவித்தார்.

இதனால் பரிந்துரை எதுவும் வழங்கப்படாமல் கூட்டம் நிறைவடைந்தது. தொடர்ந்து இம்மாதம் 26 அல்லது 27 ஆகிய தேதிகளில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் மீண்டும் நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்