ஆடி மாதம் - தமிழக கோயில்களில் களைகட்டிய திருவிழா
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் ஆடி மாத திருவிழாக்கள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்...அதன்படி, கரூர் அருகேயுள்ள நெரூர் அக்னீஸ்வரர் கோயிலில் நாத உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் இணைந்து சிவபெருமான் பாடல்களை இசைத்தனர். இந்நிகழ்ச்சி சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.இதேபோல் நெல்லை மாவட்டம், காமராஜ் நகர் பகுதியிலுள்ள வனபேச்சியம்மன் கோயிலில் ஆடி மாத வளைகாப்பு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில், வளையல்கள், பழங்கள், இனிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை அம்மனுக்கு படைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
மேலும் திருவள்ளூர் மாவட்டம், சின்னக்காவனம் கிராமத்தில் உள்ள லட்சுமி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. 14-ஆம் ஆண்டு ஆடித்திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, நெல்லை மாவட்டம், திசையன்விளை உலகம்மன் முத்தாரம்மன் கோயிலில் கொடை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.