நீட் கட் ஆப் - புதிய நடைமுறை அமல்
உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் பூஜ்ஜியம் கட் ஆப் நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.நாடு முழுவதும் உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. நீட் மதிப்பெண் அடிப்படையில் முதுகலை மருத்துவ படிப்பு முடித்தவர்கள் உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் சேர அனுமதிக்கப்படுவார்கள். கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக தனியார் கல்லூரிகளில் உயர் சிறப்பு மருத்துவர் படிப்பில் சில பாடப் பிரிவுகளில் மாணவர்கள் சேராமல் இடங்கள் காலியாக இருந்து வருகின்றன. இதனைத் தவிர்க்கும் வகையில் ஏற்கனவே முதுகலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு பூஜ்ஜியம் கட் ஆப் போதுமானது என மருத்துவ ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் சேருவதற்கும் நீட் தேர்வில் பூஜ்யம் கட் ஆப் போதுமானது என்கின்ற விதிமுறையை தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வந்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை, முதுகலை மருத்துவ படிப்புகளிலோ அல்லது உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளிலோ பெரும்பாலும் காலியிடங்கள் ஏற்படுவது இல்லை என்பதும், அதே நேரத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் மட்டுமே காலியிடங்கள் அதிகம் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இடங்களை நிரப்புவதற்கு தான் இது போன்ற ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.