உணவு பாதுகாப்பு துறைக்கு மத்தியில் இருந்து வந்த உத்தரவு
பண்டிகைக் காலம் நெருங்குவதால், உணவு பாதுகாப்பு துறை சோதனைகளை தீவிரப்படுத்த, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பண்டிகைக் காலம் நெருங்கும் நிலையில், பல்வேறு வகையான இனிப்பு மற்றும் உணவுப் பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது. இதை வாய்ப்பாக்கி, லாப நோக்கில் உணவு பொருட்களில் கலப்படம் செய்யும் சம்பவங்களும், ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், உணவு பாதுகாப்பு துறை சோதனைகளை தீவிரப்படுத்த, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச உணவு பாதுகாப்பு துறை ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், விழாக்காலம் நெருங்குவதால், இனிப்பு, கார வகைகள், பால் மற்றும் நெய், பனீர் போன்ற பால் பொருட்களில் கலப்படம் செய்வதை தடுக்கும் வகையில், சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து சோதனைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவின் தரத்தை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.