கல்லூரி விடுதியில் பிணமாக கிடந்த மாணவர்.. கள்ளக்குறிச்சி அருகே அதிர்ச்சி - நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு நேரில் மாவட்ட எஸ்பி விசாரணை மேற்கொண்டார்.
சின்ன சேலம் அடுத்த அ.வாசுதேவனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில், கடலூர் மாவட்டம் தலைகுளம் பகுதியைச் சேர்ந்த அபித்குமார் என்ற மாணவன், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், அபித்குமார், வகுப்புக்கு வராததால் அவரது நண்பர்கள் அவரை தேடியுள்ளனர். அப்போது, விடுதியில் அவர் தங்கியிருந்த அறையில், தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் மற்றும் ஏடிஎஸ்பி ஜவஹர்லால், டிஎஸ்பி ரமேஷ் மற்றும் சின்னசேலம் பொறுப்பு தாசில்தார் ரகோத்தமன் உள்ளிட்டோர் விடுதியில் மாணவன் இறந்து கிடந்ததை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.