கண்முன்னே கொஞ்சம் கொஞ்சமாக மகளை சிதைக்கும் கொடூர SMA - "எங்க குழந்தைய எப்படியாவது காப்பாத்துங்க"
கண்முன்னே கொஞ்சம் கொஞ்சமாக
மகளை சிதைக்கும் கொடூர SMA நோய்
"எங்க குழந்தைய எப்படியாவது காப்பாத்துங்க"
கை கூப்பி கதறும் பெற்றோர்...
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காக்க போராடும் பெற்றோரின் வேதனையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
கோவை சிந்தாமணிபுதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார், நித்யாதேவி தம்பதிக்கு ஏஞ்சல் போன்று இரண்டரை வயதில் லித்திக் ஷா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த அழகிய குழந்தை, சுறுசுறுப்பாக இல்லாமலும், நடக்க முடியாமலும் இருந்த நிலையில், இதுகுறித்து பரிசோதிக்க மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
பல்வேறு சிகிச்சை மேற்கொண்ட சூழலிலும், பலனளிக்கவில்லை, இறுதியாக சிறுமிக்கு SMA எனும் முதுகெலும்பு தசை சிதைவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த அரிய வகை நோயால் உயிரே போகும் அபாயம் உள்ளதால், தங்கள் குழந்தையை காக்க பெற்றோர் போராடி வருகின்றனர்.
இந்த நோய்க்கு இந்தியாவில் மருந்து இல்லாததால், ஸ்விட்சர்லாந்தில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்க வேண்டும் என்பதால், இந்த மருந்துக்கு 16 கோடி ரூபாய் வரை செலவாகும் என மருத்துவர்கள் கூறியது பெற்றோர்களுக்கு பேரிடியாய் விழுந்தது..
ஏழை குடும்பத்தை சேர்ந்த தங்களால் கோடிக்கணக்கில் பணம் புரட்ட முடியாது என்பதால், மக்களும், அரசாங்கமும் உதவி செய்ய வேண்டும் என கோருகின்றனர்..
கண் பார்வையற்ற தம்பதியின் மகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
பிறவி முதலே முதுகு தண்டுவட பிரச்சனையால் அவதியுற்ற சிறுமி
குணப்படுத்த வாய்ப்பேயில்லை என கைவிரித்த மருத்துவர்கள்
சிகிச்சைக்காக ஓடித்திரிந்து அலைந்த பெற்றோர்
சிறுமிக்கு சிகிச்சையளிக்க ரூ. 6 லட்சம் முதல் 9 லட்சம் வரை செலவு
பணமில்லாமல் தவிக்கும் கண்பார்வையற்ற தம்பதி
மகளை காக்க கண்ணீர் விட்டு கதறும் கண் பார்வையற்ற தாய்
இதே போல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கண் பார்வையற்ற தம்பதியின் குழந்தையும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி மழலை மொழியில் பேசும் 8 வயதான நித்யஸ்ரீக்கு பிறவியிலேயே முதுகு தண்டுவட பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இதனை சரி செய்யவே முடியாது என பல மருத்துவமனைகளில் கூறியும், மகளை காப்பாற்ற வேண்டும் என நினைத்த பெற்றோர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதித்ததில், சிறுமிக்கு இருக்கும் பிரச்சனையை சரி செய்வதற்கான சிகிச்சைக்கு 6 லட்சம் ரூபாய் முதல் 9 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனக் கூறியுள்ளனர்.
கண் பார்வையற்ற தம்பதி ஏற்கனவே ஏழ்மை நிலையில் உள்ளதால், தங்கள் மகளை காக்க அரசு முன் வர வேண்டும் என கண்ணீர் மல்க கோருகின்றனர்.
பிஞ்சு வயதில் அரிய வகை நோயால் அவதிப்படும் இந்த குழந்தைகளுக்கு உரிய உதவி கிடைக்குமா என ஏங்கி தவித்து வருகின்றனர் அவர்களது பெற்றோர்கள்...