ஊரையே நடுங்க விட்ட கொடூர அரக்கன்.. தானாகவே உயிரை விட துணியும் மக்கள் - எல்லையில் போர்டு வைத்த ஊரார்

x

ஊரையே நடுங்க விட்ட கொடூர அரக்கன்

தானாகவே உயிரை விட துணியும் மக்கள்

முடியாமல் எல்லையில் போர்டு வைத்த ஊரார்

கடன் தொல்லையால் தற்கொலைகள் தொடர்கதையாகி வருவதால், மக்கள் நலன் கருதி கடன் கேட்டு வர வேண்டாம் என சிவகாசி அருகே கிராம மக்கள் அறிவிப்பு பலகை வைத்த சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

பட்டாசு தயாரிப்புக்கு பெயர் போனது சிவகாசி.. ஆனால் கடந்த சில நாட்களாக சோக சம்பவங்களால் கனத்த மவுனத்தோடு இருக்கிறது.. வாழ்வாதாரத்திற்கு கடன் வாங்கிவிட்டு தவிக்கும் பலரை அதே கடன் காவு வாங்குவதால் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர் பலரும்..

கடந்த மே 23ம் தேதி, சிவகாசியில் திருத்தங்கல் பகுதியில் அரசு பள்ளி ஆசிரியர் தம்பதியர், தங்களது மகன், மகள், பேத்தி, என தனது ஒட்டுமொத்த குடும்பத்துடனும் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் அரங்கேறியது.

இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என நினைத்த கிராம மக்களுக்கு அடுத்தடுத்த சம்பவங்களும் அதே வேகத்தில் நடந்தது.. மீனம்பட்டி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த பட்டாசு தொழிலாளியான பழனிகுமார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.. இதேபோல் அதே கிராமத்தை சேர்ந்த ஞானபிரகாசம் தனது மகள் ஷர்மிளாவுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்..

இந்த இத்தனை இறப்புகளுக்கும் காரணம் கந்துவட்டி கடன் என்ற அரக்கன்... ஆம், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களிடம் கொடுத்த கடனை கேட்டு நச்சரிப்பதால், சிவகாசி சுற்றுவட்டார பகுதியில், கடந்த ஒரு மாத காலமாக கடன் தொல்லையால் மக்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது...

இதுவரை சிவகாசி வட்டாரத்தில் கந்து வட்டி கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக 3 பெண்கள் உட்பட 11 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.... இவையெல்லாம் வைத்து பார்க்கும் போது தலைவிரித்தாடும் கந்து வட்டி கொடூரத்தின் தாக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது..

வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாமல் அலைக்கழிக்க எங்களுக்கு மட்டும் ஆசையா என்ன ? என குமுறும் மக்கள், வருவாய் இல்லாததே இந்த கொடுமைக்கெல்லாம் காரணம் என கண்ணீர் வடிக்கின்றனர்...

பட்டாசு தொழிலை பெரிதும் நம்பியிருக்கும் சிவகாசி வாழ் மக்களுக்கு இம்முறை தொடர் மழை காரணமாக, வேலையில்லாமல் போனது.

மேலும், பட்டாசு தொழிற்சாலைகளில் அண்மையில் நடந்த விபத்துகளை காரணம் காட்டி தொடர்ந்து நடத்தப்படும் சோதனைகளால் சில பட்டாசு தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.

இதனால் வேலைவாய்ப்பின்றி..ஊதியமும் கிடைக்கப் பெறாததால், கந்துவட்டிக்கு பெற்ற கடன் தொகைக்கு, வட்டியும் கட்ட முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர் மக்கள்.

வைக்காத குறையாக நச்சரிப்பதால் தொடர் தற்கொலைகள் அதிகரிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் மக்கள்...

இதையெல்லாம் தடுக்க ஊர் பெரியவர்கள் கூடி ஆலோசனை நடத்தி...மீனம்பட்டி கிராமத்தின் நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர்.

அதில், பட்டாசு தொழில் முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்சமயம் கிராம மக்களுக்கு சரிவர வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால், கடன் கொடுத்தவர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர் வரும் ஜூலை மாதம் 5-ம் தேதி வரை கடன் வசூலிக்க தங்களது கிராமத்துக்கு வர வேண்டாம் என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்..

இப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தங்களின் துயர் துடைக்க, கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதும் அவர்கள் வைக்கும் கோரிக்கையாக உள்ளது..


Next Story

மேலும் செய்திகள்