அதிகாலையில் கேட்ட மரண ஓலம்... தமிழகத்தையே உலுக்கிய பயங்கரம் - பழைய ஸ்டைலில் இறங்கி அடித்த போலீஸ்
சிவகங்கையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி கொள்ளையடித்த சம்பவத்தில், தீரன் அதிகாரம் ஒன்று படத்தை பார்த்து, அதன் பாணியில் கொள்ளையடித்ததாக கைதான நபர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். பார்க்கலாம் விரிவாக...
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ளது கல்லுவழி கிராமம்... கடந்த மாதம் 26ம் தேதி, இந்த கிராமத்தில் வசிக்கும் சின்னப்பன் வீட்டில் நடந்த சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது.
அதிகாலை வேளையில், வீட்டில் அனைவரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென உள்ளே நுழைந்த மர்மநபர், வீட்டில் இருந்த சிறுவர்களையும் விட்டு வைக்காமல், கண்மூடித்தனமாக அரிவாளால் தாக்கி விட்டு, 40 சவரன் நகைகளை திருடிச் சென்றார்.
இந்த கொடூர தாக்குதலில், சின்னப்பன், அவரது மனைவி உபகார மேரி, மருமகள் வேத போதக அரசி மற்றும் 10 வயது சிறுவர்கள் இருவர் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.
மரண ஓலம் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 5 பேரையும் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொடூர கொள்ளை சம்பவம், கல்லுவழி கிராமத்தை மட்டுமல்லாமல், தமிழகத்தையே உலுக்கி இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 6 தனிப்படைகள் அமைத்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
சம்பவம் நடந்த இடம் நவீன வசதிகள் இல்லாத கிராமம் என்பதால், செல்போன் கூட அப்பகுதி மக்கள் பெரிதும் பயன்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதனால் இந்த கொடூர கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய கும்பலை பிடிப்பதில் போலீசாருக்கு சுணக்கம் ஏற்பட்டதுடன், இந்த வழக்கு பெரும் சவாலையும் ஏற்படுத்தியது.
இந்த சூழலில், நவீன யுத்தியை விட்டு பழைய முறையில் திருட்டு வழக்குகளை கையாளும் முறையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதாவது, படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள், மர்மநபர்கள் குறித்து அளித்த அங்கு அடையாளங்களை வைத்து, அதனை ஓவியமாக வரைந்து விவரங்களை போலீசார் சேகரித்தனர்.
மேலும் சுற்று வட்டார பகுதிகளில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய 50க்கும் மேற்பட்டவர்களை பின்தொடர்ந்த போலீசார், அவர்களில் பெரும்பாலானோர் வேலைக்கு செல்வதாக தெரியவந்தது. ஆனால், அதில் தினேஷ்குமார் என்பவர் மட்டும் வேலைக்கு செல்லாமல், தலைமறைவாகி இருப்பதும் உறுதியானது.
அதன் பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் அவரை பிடித்து போலீசார் தங்களது பாணியில் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
தீரன் அதிகாரம் ஒன்று படத்தை பார்த்து, அதன் பாணியில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாக கூறும் தினேஷ்குமார், அதற்கு உடந்தையாக ஹோட்டல் மாஸ்டரும், உறவினருமான கணபதி என்பவரின் உதவியுடனே இந்த சம்பவத்தை கச்சிதமாக முடித்ததாக கூறுகிறார்...
தேவகோட்டை ராம்நகர் அருகில் இருக்கக்கூடிய தென்னீர் வயல் என்ற பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார், சம்பவம் நடந்த வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கணபதி கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த துணிகர சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது.
சம்பவம் நடந்த விடியற்காலை நேரத்தில், அந்த வீட்டில் இருந்த பெண், வீட்டை ஒட்டிய கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, அவருக்கு பின்புறமாக சென்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளளார். பின்னர், சத்தம் கேட்டு மற்றவர்கள் ஓடி வரவே, அனைவரையும் கண்மூடித்தனமாக கொடூரமாக தாக்கிவிட்டு, வீட்டில் இருந்த 40 சவரன் நகைளை கொள்ளையடித்துச் சென்தறாக போலீசாரிடம் விசாரணையில் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தினேஷ்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கணபதி ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.