இரவில் சடலங்களை அள்ளிச்சென்று காலை திரும்பிய போலீசுக்கு பேரதிர்ச்சி...நடுங்கவைத்த கலவர காடு
மஞ்சுவிரட்டுக்கு மாடு வளர்த்து வந்த சகோதரர்கள் நள்ளிரவில் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை கொலையின் பின்னணி பற்றி இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்...
நள்ளிரவின் சத்தம், அந்த சூழலை மேலும் திகில் கொள்ள செய்து. கும்மிருட்டில் போலீசார், வெட்டுபட்டு கிடந்த இரண்டு சடலங்களை அள்ளி எடுத்து ஆம்புலன்சில் ஏற்றியிருக்கிறார்கள்.
விடிந்த பிறகு தான் அந்த இரட்டை கொலை எவ்வளவு கொடூரமாக நடந்திருக்கிறது என்பதை காண முடிந்தது. ரத்தம் உறைந்து கிடக்க, அந்த இடமே கலவர காடாக மாறியிருந்தது.
கொல்லப்பட்டவர்கள் மதுரை மாவட்டம் நாச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த ஜெயசூர்யா, சுபாஷ். இருவரும் சகோதரர்கள். இவர்கள் மீதும் கொலை வழக்குகள் உள்ளன. ஜெயசூர்யாவும், சுபாஷூம் மஞ்சுவிரட்டுக்கு மாடு வளர்த்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு சிவகங்கை மாவட்டம் அரண்மனை சிறுவயல் பகுதியை சேர்ந்த ராஜேஷ், நவீன், அஜய் ஆகியோரோடு நட்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கும் மஞ்சு விரட்டுக்கு மாடு அவிழ்ப்பது வழக்கம்.
இதனால் இந்த ஐவரும் சேர்ந்து ஒரு கேங்காக, சிவகங்கை சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடக்கும் மஞ்சுவிரட்டில் மாடு அவிழ்த்து வந்திருக்கிறார்கள்.
கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி பனங்குடியில் நடந்த மஞ்சுவிரட்டில் இந்த கேங் மாடுகளை அவிழ்த்து விட்டிருக்கிறது. போட்டி முடிந்த பிறகு,
ஜெயசூர்யா, சுபாஷ் இருவரும் தனது நண்பர்களான ராஜேஷ், நவீன் ஆகியோருடன், காளையார்கோவில் கே.கே.நகர் பின்புறமுள்ள விவசாய நிலத்தில் மாடுகளுடன் தங்கி வழக்கமான வேலைகளை செய்து வந்திருக்கிறார்கள்.
இந்த சூழலில் தான், சம்பவத்தன்று இரவு, திடீரென அங்கு வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஜெயசூர்யா மற்றும் சுபாஷை மட்டும் குறிவைத்து கொடூரமாக வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றிருக்கிறது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷூம் நவீனும் காளையார்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
ஜெயசூர்யா, சுபாஷ் இவர்கள் இருவர் மீதும், ஏற்கனவே கொலை வழக்கு இருப்பதால், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.
அப்போது தான் பனங்குடியில் நடந்த மஞ்சுவிரட்டில் ஒரு தகராறு நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது.
ஜெயசூர்யாவும், சுபாஷூம் மாடுகளை அவிழ்த்துவிட்டபோது அதனை புதுப்பட்டியை சேர்ந்த மதன் என்பவரின் நண்பர்கள் பிடித்ததாகவும் அதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு நடந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக இந்த கொலை நடந்திருப்பாதால், மதன் கேங் இந்த பயங்கரத்தை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
முழுமையான விசாரணைக்கு பிறகு தான், ஜெயசூர்யாவையும், சுபாஷையும் யார் கொலை செய்தார்கள்? என்ன காரணம் என்று தெரியவரும்.