ஊராட்சி மன்ற தலைவி கொடுத்த பரபரப்பு புகார் - அதிகாரிகள் மீது பாய்ந்த வழக்கு
சிவகங்கை மாவட்டத்தில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவியை சாதி ரீதியாக திட்டியதாக, ஊராட்சி ஒன்றிய உதவி இயக்குனர், ஊராட்சி செயலாளர் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.திருப்புவனம் அருகே உள்ள முதுவந்திடல் கிராமத்தைச் சேர்ந்த கௌரி மகாராஜன், ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். பட்டியலினத்தைச் சேர்ந்த அவரை, அதே ஊராட்சியில் செயலாளராக பணியாற்றும் ராஜ்குமார் என்பவர், தனக்கு நிகராக இருக்கையில் அமரக் கூடாது என்று மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. அலுவலகப் பணியாளர்களுக்கு சம்பளம், வரவு- செலவுகளை அவரே கையாள்வதாகவும் கௌரி மகாராஜன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, கௌரி மகராஜன் தனது கிராம மக்களுடன் சேர்ந்து வந்து சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய உதவி இயக்குனர் கேசவதாசன், ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் மற்றும் முதுவந்திடலைச் சேர்ந்த மகேஷ் ஆகியோர் மீது பழையனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.