திருப்பூரை அதிர வைத்த மோசடி - ஐ.ஜி. நீதிமன்றத்தில் ஆஜர்
திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில், ஐ.ஜி. பிரமோத்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார்.திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பாசி நிதி நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு இரு மடங்கு லாபம் தருவதாகக்கூறி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாசி நிதி நிறுவன உரிமையாளர் கமலவள்ளி உள்ளிட்ட சிலரை கடத்தி பணம் பறித்ததாக, மேற்கு மண்டல ஐ.ஜியாக இருந்த பிரமோத்குமார், டி.எஸ்.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. கோவை மாவட்ட 2வது கூடுதல் சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை அடுத்த ஆண்டு ஜூலைக்குள் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கில் பிரமோத்குமார் உட்பட 5 பேருக்கு எதிராக ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பிரமோத்குமாருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரண்டை சி.பி.ஐ நீதிமன்றம் பிறப்பித்தது. இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக கோவை சிபிஐ நீதிமன்றத்தில் பிரமோத்குமார் ஆஜரானார்.