"உடனே இலங்கைக்கு அனுப்புங்க..!"
நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, சாந்தனை இலங்கை அனுப்ப கடந்த 22ம் தேதி அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அனுப்பி வைக்காதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, பிப்ரவரி 27ம் தேதி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சாந்தனை இலங்கை அனுப்பிவைக்க முயற்சித்த போது, மாரடைப்பு ஏற்பட்டு மறுநாள் மரணமடைந்து விட்டதாக தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதே நேரத்தில், சான்றுகளை சமர்ப்பித்தால், சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்வதற்கான அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், சான்றுகளைப் பெற்றதும் உடனடியாக அனுமதியை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும் உத்தரவிட்டனர். இவற்றை நிறைவேற்றியது குறித்து மார்ச் 4ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.