சாம்சங் விவகாரத்தில் திடீர் திருப்பம்.. அமைச்சருக்கு அதிர்ச்சி கொடுத்த அறிவிப்பு
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அமைச்சர்கள் தாமோ அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, சி.வி.கணேசன் தலைமையிலும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலையிலும் தலைமைச் செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், ஊதியத்தை உயர்த்தப்படும், இடைக்கால சிறப்பு ஊக்கத்தொகையாக மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்,, குளிரூட்டப்பட்ட பேருந்துகள் அனைத்து வழித்தடங்களுக்கும் விரிபடுத்தப்படும் என்பது உட்பட 14 முடிவுகள் எடுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்பின்னர் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், பேச்சுவார்த்தையில் 14 கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானதாக தெரிவித்தார்.
இதனிடையே, சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் என்று சிஐடியு அறிவித்துள்ளது. தொழிற்சங்கத்தின் தலைவர் முத்துகுமார் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் தெரிவித்துவிட்டு முடிவை சொல்வதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெளிவுபட கூறியதாகவும், அதனால் பேச்சுவார்த்தையின்போது வெளியே வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பின்னர், நிர்வாகத்திற்கு ஆதரவான குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவித்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால், சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என்றும், போராட்ட பந்தலில் தொழிலாளர்கள் குடும்பத்தோடு பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.