பெண்ணுக்காக காருக்குள் அரங்கேறிய பயங்கரம்.. சேலத்தில் பகீர் சம்பவம்!
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் இருந்து இளம்பிள்ளை செல்லும் பிரதான சாலையில் இடங்கணசாலை மணல் ஏரி அருகே கார் ஒன்று கேட்பாரற்று நின்றது. காருக்குள் ஆண் சடலம் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் விசாரணையில் காருக்குள் சடலமாக கிடப்பது சின்னப்பம்பட்டி சேர்ந்த மெக்கானிக்கான பாரதிராஜா என்பது தெரியவந்தது. பாரதிராஜாவுடன் கார் பட்டறையில் பணிபுரிந்து வந்த ரவியை பிடித்து விசாரித்ததில் , கடந்த 12 ஆம் தேதி இருவரும் மது அருந்திக் கொண்டிருந்ததும், அப்போது தன்னுடன் தொடர்புடைய சக பெண் ஊழியரிடம் செல்போனில் அடிக்கடி பாரதிராஜா பேசிய வருவது குறித்து ரவி கேட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்தது. இதில் ஆத்திரமடைந்த ரவி அம்மிக்கல்லால் பாரதிராஜாவை அடித்து கொலை செய்துள்ளார். பிறகு பட்டறையில் உள்ள காரில் அவரது சடலத்தை வைத்து பாலத்தின் அருகே காரை நிறுத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். இதையடுத்து போலீசார் ரவியை கைது செய்தனர்.