அதிமுக நிர்வாகியிடம் ரூ.3 கோடி வழிப்பறி செய்த சகோதரர் வழக்கு -திருச்சி நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு
திருச்சியில் 3 கோடி ரூபாயை வழிப்பறி செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
திருச்சியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி கண்ணதாசன், கணக்கில் வராத பணம் 3 கோடி ரூபாயை 3 மூட்டைகளில் எடுத்துச் செல்வதாக அவருடைய சகோதரர் சதீஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சதீஷ் குமார் தனது நண்பர்களுடன் கண்ணதாசனின் காரை பின்தொடர்ந்து சென்று, மடக்கிப் பிடித்து கத்தி முனையில் அந்த பணத்தை கொள்ளை அடித்ததாக கூறப்படுகிறது. ஒரு மூட்டையில் இருந்த பணம் சாலையில் கொட்டியதால், 2 கோடியுடன் அந்த கும்பல் தப்பியதாக கூறப்படுகிறது. சாலையில் விழுந்து கிடந்த ஒரு கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு, திருச்சி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வந்த நிலையில், சதீஷ்குமார், லெட்சுமி நாராயணன் என்கிற திலீப் குமார் உள்ளிட்ட 10 பேரை விடுதலை செய்து உத்தரவிடப்பட்டது. 10 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி செல்வ முத்துமாரி கூறினார்.