"மலிவு விலை தங்கம்.. கிராம் ரூ.1000 மட்டுமே"..சொன்னது போலவே வாங்கி கொடுத்த பெண்
மலிவு விலையில் தங்கம் என கவர்ச்சிகரமான திட்டத்தைக்கூறி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய தில்லாலங்கடி பெண் கைது செய்யப்பட்டுள்ளார்...ராணிப்பேட்டை மாந்தாங்கல் அடுத்த காந்தி நகரைச் சேர்ந்த சசிகலா ஈரோட்டில் உள்ள பிரபல மார்க்கெட்டிங் நிறுவனத்தின் மூலம் தங்கம் கிராமுக்கு ஆயிரம் ரூபாய் விலை மலிவாகக் கிடைப்பதாக கவர்ச்சிகரமான திட்டத்தைப் பொதுமக்களிடம் பரப்பியுள்ளார்... அவர்களை நம்ப வைக்க ஒரு சிலரிடம் வாங்கிய சிறிய தொகைக்கான தங்க நாணயங்களையும் வழங்கியுள்ளார். இதை நம்பி கூலித் தொழிலாளர்கள், வியாபாரிகள் என பல தரப்பினரும் முதலீடு செய்யவே, அவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் பரிந்துரைத்துள்ளனர்... ஆனால் கொஞ்ச நாள் கழித்து வாங்கிய பணத்திற்குத் தங்கம் தராமல் ஏமாற்றிய சசிகலா, எதிர்த்துக் கேட்டவர்களை மிரட்டவும் செய்ததாகத் தெரிகிறது... இதனால் 30க்கும் மேற்பட்டோர் ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 13ம் தேதி புகார் அளித்தனர். குறிப்பாக அம்மூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவரிடமிருந்து மட்டும் 1 கோடியே 16 லட்சம் ரூபாய் வசூல் செய்த நிலையில் அவர் கொடுத்த புகாரின் பேரில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் மீது போலீசார் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மீண்டும் புகார் வந்ததால் தலைமறைவாக இருந்த சசிகலாவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சசிகலாவின் உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்.