வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்த ராமேஸ்வரம் மீனவர்கள்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேருக்கு வருகின்ற 27ஆம் தேதி வரை சிறைக் காவலும், 2 சிறுவர்ளை சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கவும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று முந்தினம் இலங்கை நெடுந்தீவு கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. இதையடுத்து அங்குள்ள ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர்களில் 15 பேரை வருகின்ற 27 ஆம் தேதி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் 2 சிறுவர்களை அச்சுவேலி சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும், புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்ததுடன் அவர்களின் படகுகளை சிறைப்பிடித்தது. அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தால் நாளொன்றுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.