மறைந்திருந்த விஜிலென்ஸ் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட அதிகாரி
ராமநாதபுரம் மாவட்டம் தேவக்கோட்டை, விவேகானந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் சேவபெருமாள். ராமநாதபுர ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வட்டார வளர்ச்சி அலுவலரான இவர், வீட்டு மனைக்கு வரைபட அனுமதி வழங்க 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகாரளிக்கப்பட்டது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து மறைந்திருந்த ராமநாதபுர லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், சேவபெருமாள் லஞ்சம் பெறுவதை நோட்டமிட்டு அவரை வசமாக பிடித்த நிலையில், சேவபெருமாளை கைது செய்து அவரிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, தேவக்கோட்டையில் உள்ள சேவபெருமாள் வீடு மற்றும் அவர் தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்நிலையில், தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் சேவபெருமாள் வரும் அக்டோபர் மாதத்தோடு பணி ஓய்வு பெற இருந்ததும் குறிப்பிடத்தக்கது.