சூறைக்காற்றுடன் பேய் மழை... ஒரே நாளில் திக்குமுக்காடிய தமிழகத்தின் பல பகுதிகள்
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் சூறைக்காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய திடீர் மழை பெய்தது. கீழம்பி, தாமல், பாலுசெட்டி சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஓரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. மணலூர், கிள்ளை, பிச்சாவரம், வேலக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி, கீரப்பாளையம், மருதூர், சாத்தப்பாடி உள்ளிட்ட பகுதியில் மழையால் வெளுத்து வாங்கியது. சுமார், அரை மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
செங்கல்பட்ட மாவட்டம் திருப்போரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த மழையால், படூர் பகுதியில் மின் கம்பியின் மீது, ராட்சத பேனர் கிழிந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது.