ஃபுல் மப்பில் டிரைவிங்; 2 உயிர்களை பறித்த சிறுவன்- பெரும்புள்ளி பையனாம்... சிலமணி நேரத்தில் ஜாமின்

x

மகாராஷ்டிராவில் போர்ஷே சொகுசு காரை சிறுவன் மதுபோதையில் ஓட்டிச் சென்று ஏற்படுத்திய விபத்து குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

புனேவில் குறுகலான சாலையில்.. மின்னல் வேகத்தில் கார் பறக்கும் காட்சிகள் காண்போரை சற்று பதைபதைக்கவே செய்யும்... 160 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்த கார் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட கோர விபத்து தொடர்பாக காரை ஓட்டிய சிறுவனை கைது செய்தனர் புனே போலீசார்.

விசாரணையில் கைது செய்யப்பட்டவர் 17 வயதான சிறுவன் என்றும் வாகனத்தை ஓட்ட உரிமம் பெறாதவர் என்றும் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது.

கைது செய்யப்பட்ட சிறுவன் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் விஷால் அகர்வால் எனவும் 4 கோடி ரூபாய்க்கு போர்ஷே சொகுசு காரை வாங்கியிருக்கிறார், வாங்கிய கார் பதிவு செய்யப்படாத நிலையில்,... நம்பர் பிளேட்டும் கொடுக்கப்படவில்லை.. இந்த காரை எடுத்துக்கொண்டுதான் சிறுவன் இரவு பார்ட்டிக்கு சென்றிருக்கிறார் என்பது தெரியவந்தது.

சிறுவன் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்காக நண்பர்களுக்கு டிரீட் கொடுக்க இரவு சென்றிருக்கிறார். அங்கு மது அருந்திவிட்டு அதிகாலை 3 மணியளவில் மது போதையில் வீடு திரும்பிய போதுதான் காரை முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதவிட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட சிறுவன் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது... அதுவும் 14 மணி நேரத்தில் என வெளியான தகவல் நாடு முழுவதும் பேசுபொருள் ஆனது. 15 நாட்கள் வாகன போக்குவரத்து போலீசாருக்கு உதவ வேண்டும், Child in Conflict with Law என்ற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும் எனக் கூறி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஆனால் இதற்கு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சிறுவனை, சிறார் நீதிச் சட்டத்திலிருக்கும் சிறப்பு பிரிவுகள் அடிப்படையில் இளைஞராக கருத வேண்டும் என போலீஸ் தரப்பு கூறியிருக்கிறது. இதற்கிடையே சிறுவனின் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் விஷால் அகர்வால் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

18 வயது ஆகாத சிறுவனுக்கு காரை வழங்கியது, சிறுவன் மது அருந்துவார் என தெரிந்தும் பார்ட்டிக்கு அனுப்பியது ஆகிய குற்றங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுபோல் சிறுவனுக்கு மதுவை வழங்கிய மதுபான விடுதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணையை மேற்கொண்ட போலீசார் தலைமறைவாக இருந்த சிறுவனின் தந்தை விஷால் அகர்வாலை கைது செய்துள்ளனர்.

18 வயதுக்கு குறைந்த சிறார்கள் சொகுசு கார்களையும், பைக்குகளையும் ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையில்.. இதற்கு எண்ட் போட கடும் நடவடிக்கை அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்..


Next Story

மேலும் செய்திகள்